சிறுவனை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை; போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் அடுத்துள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் நகுலன்(6).
அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகன் அருண்ராஜ் என்பவர் கஞ்சா போதையில் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கி கொலை செய்து விட்டார்,
2019ஆம் ஆண்டு டிசம்பர் 30 தேதி நடந்த இந்த கொலை தொடர்பாக எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி முத்துலாபுரம் வைப்பாற்றில் பதுங்கி இருந்த அருண்ராஜை சுற்றி வளைத்து பிடித்து ஸ்டேசனுக்கு கொண்டு வந்து விசாரித்தனர். கஞ்சா போதையில் இருந்த அவர், சிறுவன் நகுலனை பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.
பின்னர் முத்துலாபுரம் ஆற்றுப்பாலம் மற்றும் வைப்பாறு படுகையோர பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி காட்டுப்பகுதியில் கிடந்த சிறுவன் உடலை போலீசார் கைப்பற்றினர்.
இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் போலீசார் போக்சோ சட்டப்பிரிவு, கொலை குற்றத்திற்கான சட்டப்பிரிவு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று இவ்வழக்கின் குற்றவாளியான அருண்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ 30 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
