சட்டசபையில் அமளி: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்

தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அந்த தியாகி யார்? என பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு சென்றனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் இவ்வாறு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கேள்வி-நேரம் முடிந்தபின், டாஸ்மாக் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கேட்டார். அப்போது குறுக்கீட்ட சபாநாயகர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை பேச அவையில் இடமில்லை என கூறி அனுமதி மறுத்தார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி அளிக்காததால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுகவினரை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
சட்டசபைக்கு வெளியே நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
“டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டோம். டாஸ்மாக் அரசு சார்ந்த நிறுவனம் என்பதால்தான் கேள்வி கேட்கிறோம். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று அரசு சொல்வது ஏன்? டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தபோது, நாங்கள் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டுமென்று கேட்டோமா?
கச்சத்தீவு யார் ஆட்சியில் தாரைவார்க்கப்பட்டது. கச்சத்தீவு திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்டது. அதை முதல்-அமைச்சர் மறைக்கப் பார்க்கிறார். நீட் தேர்வை கொண்டு வந்ததும் திமுக-காங். ஆட்சிதான்.”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
