தர்பூசணியில் ரசாயனம் கலந்ததாக பரவிய தகவல்: சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கியதையொட்டி, தர்பூசணி விற்பனை களை கட்டியது. இந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சில கடைகளில் தர்பூசணிகளை சோதனை செய்து அந்த பழங்களை அகற்றினர். அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டதாக தகவல்கள் பரவியது.
இதையடுத்து, மக்களிடையே அச்சம் பரவ தொடங்கியது. தர்பூசணி வாங்குவதையோ, சாப்பிடுவதையோ தவிர்த்தனர். இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர்.
மக்களிடையே தர்பூசணி குறித்த பயம் தொற்றிக்கொண்டதை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியான சதீஷ்குமார் விளக்கம் கொடுத்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் .”சென்னையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில் சென்னையில் சில இடங்களில் மட்டும் எலி கடித்த பழம், அழுகிய பழங்களை உள்ளிட்டவைகளை மட்டுமே அப்புறப்படுத்தி இருந்தோம். சென்னையில் செயற்கை நிறங்களை கலக்கப்பட்டதாக எந்த பழங்களும் அப்புறப் படுத்தவில்லை. உணவு பாதுகாப்புத் துறை எந்த வகையிலும் விவசாயிகளுக்கு எதிரி இல்லை. யாரோ ஒரு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட சதீஷ் குமார் தமிழ்நாடு மருந்து நிர்வாகத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்\
திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாபுத்துறை அதிகாரி போஸ் கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புக்களை கவனிப்பார் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


