தூத்துக்குடியில் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கும் அபாயம்

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு சுமை ஏற்றிச்செல்லும் பணியில் டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கான வாடகை ஒப்பந்தம் ஆகஸ்டு 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஒப்பந்தத்தில், 21 டன் எடையுள்ள எரிவாயு, 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்ற விதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
எனவே, புதிய ஒப்பந்தத்தில் விதிகளை திருத்தம் செய்து, 2 அச்சு லாரிகளை சதவீத அடிப்படையிலான ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும். வாடகை நிர்ணயிப்பதில் பழைய முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி \வேலைநிறுத்தப் போராட்டத்தில் தூத்துக்குடி எரிவாயு டேங்கர் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கமாக தூத்துக்குடி வஉசி துறைமுகம், கொச்சி துறைமுகம் ஆகியவற்றில் சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் மூலம் நாள்தோறும் சுமார் 200 டன் எரிவாயு தூத்துக்குடி-மதுரை புறவழிச் சாலையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கொண்டு வரப்படும்.
அங்கிருந்து சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
தற்போது டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
