• April 29, 2025

`ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ – கொடாவா சமூகத்தினர் வலியுறுத்தல்

 `ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ – கொடாவா சமூகத்தினர் வலியுறுத்தல்

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, “கீதா கோவிந்தம்”, “டியர் காம்ரேட்”, “பீஷ்மா” உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் விக்கி கவுசல், ராஷ்மிக மந்தனா நடிப்பில் இந்தியில் வெளியான ‘சாவா’ திரைப்படம் ரூ.500 கோடி வசூலை எட்டியது. இதற்கு முன்பு ராஷ்மிகா நடித்த ‘புஷ்பா 2″ இந்தி பதிப்பில் ரூ.800 கோடியும் ‘அனிமல்” இந்தி பதிப்பில் ரூ. 555 கோடியும் வசூலித்திருந்தது. இதன் மூலம் இந்தியாவில் இந்தியில் தொடர்ந்து மூன்று ரூ. 500 கோடி வசூல் செய்த படங்களை கொடுத்த ஒரே நடிகை என்ற பெருமையை ராஷ்மிகா பெற்றுள்ளார்.

இதற்கிடையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவி கனிகா சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் தனக்கு நேரமில்லை என்று கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார் என்றும் கூறினார். மேலும் ‘ராஷ்மிகா மந்தனாவிற்கு பாடம் புகட்ட வேண்டாமா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கொடவா சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா ஆகியோருக்கு கொடாவா தேசிய கவுன்சிலின் தலைவர் நச்சப்பா எழுதியுள்ள கடிதத்தில், ராஷ்மிகா மந்தனாவிற்கு சுயமாக முடிவெடுக்கும் உரிமை உள்ளது என்றும், அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, தனது அர்ப்பணிப்பு, திறமையின் மூலம் இந்திய திரைத்துறையில் வெற்றி பெற்றுள்ளார் எனவும், அவரது சமூக பின்னணி காரணமாகவே அவர் குறிவைத்து தாக்கப்படுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் நச்சப்பா வலியுறுத்தியுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *