நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் நிர்ணயம்;அரசு ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தல்


கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்க 38-ம் ஆண்டு விழா நடந்தது. சங்கத் தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். செயலாளர் கேசவன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் விஜயன் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் ஜவகர் விழாவை தொடங்கி வைத்து பேசினார். விழாவில், முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிறுவனர் மாயவன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க திருநெல்வேலி மண்டல துணைத் தலைவர் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி முதுநிலை ஆசிரியர் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ஜனகராஜ் பேசினார்.
அரசு ஊழியர் சங்க துணை செயலாளர் கோபாலகிருஷ்ண சாமி, துணை தலைவர் அய்யலுசாமி ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
*தமிழக அரசு ஊதியர்களுக்கு மத்திய அரசு போன்று ஓய்வூதியம் நிர்ணயம், குறைந்தபட்ச ஓய்வூதியம், மருத்துவப்படி மற்றும் அனைத்து ஓய்வூதிய பலன்களை அமல்படுத்த வேண்டும்.
*கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படுவதை 65 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
*தேசிய ஓய்வூதிய கொள்கை ஏற்படுத்தி நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
*தமிழக அரசு ஓய்வூதியர்கள் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ. 50000 வழங்குவது போன்று குடும்ப ஓய்வூதியர் இறந்தாலும் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சங்கரநாராயணன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் சுடலை, மகாத்மா காந்தி அறக்கட்டளை பொருளாளர் சுப்பராயலு மற்றும் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
