அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்

ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ஆம் தேதி சோதனை நடத்தினர்.
சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் டாஸ்மாக் வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆன நிலையில், இந்த விவகாரத்தில் முக்கிய நபராக பார்க்கப்படும் ஆகாஷ் பாஸ்கரன் ஆஜர் ஆகவில்லை.

முன்னதாக டாஸ்மாக் முறைகேடு வழக்கில் விசாரணை வளையத்திற்குள் ஆகாஷ் பாஸ்கரன் கொண்டு வரப்பட்டநிலையில், டான் பிக்சர்ஸ் உரிமையாளரான ஆகாஷ் பாஸ்கரன் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஆகாஷ் பாஸ்கரன் இன்று நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று ஆகாஷ் பாஸ்கரன் ஆஜர் ஆகாத நிலையில், அவர் எங்கு உள்ளார்? என்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

