6-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை; தூத்துக்குடியில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்

தூத்துக்குடியில் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 270 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். சில ஆண்டுகளாக மீன்கள் சரிவர கிடைக்காததால் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி முதல் விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 6-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 270 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மீனவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத மீனவளத்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேவியர் வாஸ் தலைமையில் 50 பெண்கள் உட்பட 300 பேர் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் புதிய துறைமுகம் கடற்கரை சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் மீன் வள துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
