• May 22, 2025

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு; அமலாக்கத்துறை தகவல்

 டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு; அமலாக்கத்துறை தகவல்

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே நடத்திய சோதனை அடிப்படையில் அமலாக்கத்துறை தெரிவித்தது.

இந்தநிலையில் சமீபத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் சோதனை நடத்தினார்கள். அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இதேபோல் சினிமா பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தினந்தோறும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளை தினமும் அமலாக்கத்துறை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் கொள்முதல் பிரிவு பொதுமேலாளர் சங்கீதாவையும் நேற்று விசாரணைக்கு அழைத்தனர். அவர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு நடந்துள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு இடங்களில் லைசென்ஸ் இல்லாத பார்கள் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் இல்லாத பார்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக்கிலிருந்து மது விற்பனை நடந்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரே நபர், பல நபர்களின் ஜிஎஸ்டி எண்களில் பார்களை டெண்டர் எடுத்துள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பார்களை டெண்டர் எடுத்த நபர், அரசுக்கு தெரியாமல் பலருக்கு சப்-கான்டிராக்ட் விடப்பட்டிருப்பதும், சப்-கான்டிராக்ட் விடப்பட்ட பார்களில் மதுபானை வகைகளை அதிக அளவில் கூடுதல் விலைக்கு விற்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பார்களில் 30-40 சதவீதக்கு மேல் மோசடி செய்யப்பட்டு டெண்டர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் அதிக மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *