கோவில்பட்டி தினசரி சந்தை, திறப்பு விழாவுக்கு தயார்; நகராட்சி கூட்டத்தில் தலைவர் அறிவிப்பு
![கோவில்பட்டி தினசரி சந்தை, திறப்பு விழாவுக்கு தயார்; நகராட்சி கூட்டத்தில் தலைவர் அறிவிப்பு](https://tn96news.com/wp-content/uploads/2025/01/459c6946-5c9c-422a-8461-0103d07dfeb7-850x560.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/a2835c88-d158-42b2-ac69-868f5119f233-1024x512.jpg)
கோவில்பட்டி நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையர் கமலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-
விஜயகுமார் (பாஜக):- சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததன் பேரில் நகராட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால், கால்நடைகளின் உரிமையாளர் ஒருவர் என்னை மிரட்டுகிறார். அக்ரஹாரம் தெருவில் வாறுகால் அமைத்து 25 ஆண்டுகளாகி விட்டது. இதனால் அது மண்ணோடு மண்ணாகிவிட்டது. எனவே, அதனை சீரமைத்து, புதிதாக வாறுகால் அமைத்து தர வேண்டும்,
கவியரசன் (அதிமுக):- 32-வது வார்டுக்கு உட்பட்ட பாரதி நகர் 3-வது மேட்டுத் தெருவில் பாதியில் விடப்பட்டுள்ள சாலைப்பணிகளை முழுமையாக செய்து முடிக்க வேண்டும். அம்பேத்கர் தெருவில் உள்ள குறுக்குத் தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். இந்த வார்டுக்கு உட்பட்ட ஆழ்துளை கிணறு அமைத்து, அதிலிருந்து மோட்டார் அறையில் இருந்து செல்லும் குழாய் உடைந்து கிடப்பதால், தெருக்களுக்கு பயன்பாட்டுக்குரிய தண்ணீர் வழங்க முடியவில்லை. எனவே, குழாயை சீரமைத்து தர வேண்டும்.
மணிமாலா (மதிமுக) :- தினசரி சந்தை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும். இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை இருபுறமும் 2-வது குடிநீர் குழாய் திட்டத்தில் குழாய் பதித்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.
சண்முகராஜ்(திமுக):- 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
முத்துலட்சுமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):-:-10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொது கழிப்பிடம் மற்றும் பள்ளி கழிப்பறை ஆகியவற்றுக்கு ஒரே கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு தனித்தனியாக கழிவுநீர் தொட்டி கட்ட வேண்டும்.
ராமர் (திமுக):- பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நகராட்சி இடத்தை முழுமையாக மீட்டு, அதில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும்.
ஏஞ்சலா(திமுக):- ஜோதி நகர் 4-வது தெரு விரிவாக்கப் பகுதியில் சாலைகள் தாழ்வாக உள்ளதாலும் வாறுகால் வசதி இல்லாததாலும் மழை நீரும், கழிவு நீரும் தேங்கி சுகாதார கேடாக உள்ளது, எனவே புதிதாக வாறுகால் வசதி செய்து தரவும் தாழ்வாக உள்ள சாலையை உயர்த்தி புதிதாக சாலைகள் அமைத்து தர வேண்டும். மேலும் வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் 2-வது குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்க சாலையில் தோண்டப்பட்ட இடங்களில் பேட்ஜ் வேலை செய்து தர வேண்டும்.
உறுப்பினர்கள் விவாதத்துக்கு பதில் அளித்து நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி பேசியதாவது:-
அக்ஹாரம் பகுதியில் வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தினசரி சந்தை கட்டுமான பணிகள் முடிவடைந்து, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. சந்தை திறந்தவுடன், தினசரி சந்தை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
2-வது குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலைப்பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும். சிறிய தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்கப்படும். நகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சீரமைக்கப்படும்,.
இவ்வாறு அவர் பேசினார்..
கோவில்பட்டி நகராட்சி புதிதாக கட்டி இருக்கும் தினசரி சந்தையில் தற்போது 97 கடைகள். கழிப்பறை வசதி. கேண்டீன் வசதி, ஓட்டுனர் ஓய்வு அறை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன காப்பகங்கள் இடம்பெற்றுள்ளன.
அனைத்து பகுதிகளுக்கும் எல்.இ.டி விளக்குகளுடன் கூடிய அதிநவீன வசதிகள் கொண்ட தினசரி சந்தை 6.87 லட்சம் செலவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த பணிக்காக 2 ஆண்டுகளாக இந்த சந்தை இயங்கவில்லை. திட்டங்குளத்தில் தனி சந்தை இயங்கி வருகிறது. மேலும் நகரில் சாலையில் ஆங்காங்கே சாலைகளை ஆக்கிரமித்து கடைகளை வியாபாரிகள் அமைத்து நடத்தி வருகிறார்கள்..
.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)