அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
வீரம், பக்தி, ராம சேவை, பேச்சாற்றல், புத்தி கூர்மை ஆகியவற்றிற்கு உதாரணமாக விளங்குபவர் அனுமன்.
ராம காவியத்தின் ஆணிவேராக விளங்கக் கூடியவர் அனுமன். ராமாயணத்தில், அனுமனின் திறன்களை அழகாக எடுத்துக் கூறும் பகுதிக்கு தான் சுந்தரகாண்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சுந்தரகாண்டத்தை படித்தாலே எப்படிப்பட்ட துன்பங்களும் தீரும். அனுமன் அவதரித்த தினத்தையே அனுமன் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். மார்கழி மாத அமாவாசையில், மூலம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் அனுமன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
2024ம் ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதத்தில் ஏற்கனவே ஒரு அனுமன் ஜெயந்தி வந்த நிலையில், தற்போது வருடத்தின் கடைசியாகவும் அனுமன் ஜெயந்தி அமைந்துள்ளது. டிசம்பர் 30ம் தேதி (நேற்று) அனுமன் ஜெயந்தி ஆகும்.
அதிகாலை காலை 4.44 மணிக்கு தொடங்கி, இன்று 31ம் தேதி காலை 5.03 வரை அமாவாசை திதி உள்ளது. அதே போல் நேற்று 30ம் தேதி அதிகாலை 12.19 மணிக்கு தொடங்கி, இன்று டிசம்பர் 31ம் தேதி அதிகாலை 1.12 வரை மூலம் நட்சத்திரம் உள்ளது.
அனுமன் ஜெயந்தி உற்சவம் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி தேவி – நீலாதேவி உடனுறை சுந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் நேற்று காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு,காலை 7மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது.
பூஜைகளை வரதராஜன் ஐய்யங்கார் செய்தார்.பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. கட்டளைதாரர் போத்தித்தேவர்,பேச்சியம்மாள் மற்றும் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதி ராஜா, மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி சந்திரசேகர், த மா கா தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால், முன்னாள் நூலகர் பூல்பாண்டி, கண்ணன், பரமசிவம் உள்பட, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயர் திருவீதி உலா நடைபெற்றது.
இதுபோல் பல்வேறு கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் தீப ஆறாதனைகள் நடைபெற்றன.