டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் காற்று மாசு; 1-5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த உத்தரவு
தேசிய தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெறும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வேளாண் செழிப்பாக இருக்கிறது. விவசாயிகள் ஆண்டின் இறுதியில் பயிர் கழிவுகளை எரித்து அழித்து, புதிய பயிரிடலுக்கு தயாராவார்கள். இந்த கழிவு எரிப்பு மூலம் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. காற்றின் தரம் (AQI) 100-ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்ற காற்று இல்லை. ஆனால் டெல்லியில் மாசு 400-ஐ தாண்டியிருக்கிறது.
கடும் பனிமூட்டமும், காற்று மாசும் சேர்ந்து டெல்லி மக்களை வாட்டி வதைக்கிறது. டெல்லியில் ஒவ்வொருவரும் சுமார் 33 சிகிரெட்டுகளை புகைக்கும் அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது சுவாச கோளாறு, கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மறுபுறம் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்களில் 115 தாமதமாக வந்து சேர்ந்திருக்கின்றன. அதேபோல இங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்களிலும் 226 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றிருக்கின்றன. இப்படியாக காற்று மாசு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில் டெல்லியில் 1-5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் சொல்லி தர டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது எதிர்கொள்ளும் காற்று மாசு சிக்கல் இதன் மூலம் குறையும் என்றும் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. அதேபோல மாணவர்களுக்கான உடற்கல்வி வகுப்புகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
டெல்லியில் 39 காற்று மாசு மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். நேற்று இதில் 32 மையங்களில் மாசு 400-ஐ கடந்திருந்தது. தற்போது டெல்லியில் அனைத்து வகை கட்டுமான பணிகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கட்டுமான பணிகள் மூலம் ஏற்படும் காற்று மாசை இதன் மூலம் குறையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.