• November 14, 2024

‘புல்டோசர்’ நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள 10 வழிகாட்டுதல்கள்

 ‘புல்டோசர்’ நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள 10 வழிகாட்டுதல்கள்

நாட்டின் பல மாநிலங்களில் புல்டோசர்களை கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை இடித்த பல சம்பவங்கள் நடந்துள்ளன.

இது தொடர்பான வழக்கில், “குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவருடைய வீட்டை எப்படி இடிக்க முடியும் என சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் மாதம் கேள்வி எழுப்பியிருந்தது. இத்தகைய வழக்குகளில் வீடுகளை இடிப்பதற்கு முன்பாக பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் இன்று (நவம்பர்.13) 10 வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளனர்.

குற்ற வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக, ஒருவருடைய வீட்டையோ அல்லது அவருக்கு சொந்தமான மற்ற கட்டடங்களையோ இடிப்பது, சட்டத்திற்கு எதிரானது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

“சாமானியர் ஒருவர் வீடு கட்டுவதென்பது, அவருடைய பல ஆண்டுகள் கடின உழைப்பு, கனவு மற்றும் லட்சியத்தின் வெளிப்பாடு,” என உத்தரவை பிறப்பிக்கும் போது நீதிபதி கவாய் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள 10 வழிகாட்டுதல்கள்:-

உள்ளூர் நகராட்சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவு அல்லது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பான 15 நாட்கள், இரண்டில் எது அதிகமோ அதற்கேற்ப முன்பே நோட்டீஸ் அனுப்பாமல், எவ்வித கட்டட இடிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள கூடாது.

இடிப்புக்கான காரணம் உள்ளிட்ட விரிவான தகவல்கள் அடங்கிய நோட்டீஸ், பதிவு செய்யப்பட்ட தபால் வாயிலாக அனுப்பும் அதேவேளையில் அந்த கட்டிடத்திலும் ஒட்டப்பட வேண்டும்.

நடவடிக்கையை முன் தேதியிட்டு செயல்படுத்துவதாக எழும் குற்றச்சாட்டை தவிர்க்க, உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட உடன், அது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு நகராட்சி நிர்வாகமும் இன்றிலிருந்து 3 மாதங்களுக்குள் இதற்கென டிஜிட்டல் இணையதளத்தை உருவாக்க வேண்டும். அதில், நோட்டீஸ் அனுப்பப்பட்டது, அதற்கான பதில், அது தொடர்பான உத்தரவுகள் குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும்.

சம்பந்தப்பட்டவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்த சந்திப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும்.

கட்டிடத்தை இடிப்பதற்கான இறுதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தல் மற்றும் நீதித்துறை ஆய்வுக்கு உரிமையாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

கட்டடத்தை இடிப்பதற்கான உத்தரவு இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

உத்தரவிடப்பட்ட 15 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படாத கட்டிடத்தை இடிக்க அல்லது அகற்றுவதற்கான வாய்ப்பு உரிமையாளருக்கு வழங்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை என்றால், இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

கட்டிடம் இடிக்கப்படுவதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும், அதுதொடர்பான அறிக்கையும் தயார் செய்யப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளுள் ஏதாவது மீறப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகுக்கும். விதிகளை மீறி கட்டடத்தை இடித்தது கண்டறியப்பட்டால், இடிக்கப்பட்ட கட்டடத்திற்கான மறுசீரமைப்புக்கு ஆகும் செலவை அதிகாரிகளே தங்களின் தனிப்பட்ட பணத்திலிருந்து வழங்க வேண்டும்.

எனினும், சாலை போன்ற பொது இடத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டடங்களுக்கும், நீதிமன்றத்தால் இடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கட்டிடங்களுக்கும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தாது. என சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *