கலெக்டரை விரட்டி அடித்த மக்கள்-கார் மீது கல் கட்டைகளை வீசி தாக்குதல்: தெலுங்கானாவில் பரபரப்பு
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்ட கலெக்டர் பிரதீக் ஜெயின் மற்றும் அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டி விரட்டி தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதுதொடர்பான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்ட கலெக்டராக இருப்பவர் பிரதீக் ஜெயின். இந்த மாவட்டத்தில் லக்செர்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமப்பகுதியில் புதிதாக மருந்து நிறுவனங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மருந்து நிறுவனங்களுக்கு நிலம் தேவைப்படுகிறது. இதையடுத்து கிராம மக்களிடம் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலத்தை மருந்து நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக லக்செர்லா கிராம மக்களிடம் பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டது.
அதன்படி இன்று லக்செர்லா கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் பிரதீக் ஜெயின் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அப்போது மருந்து நிறுவனங்களுக்காக நிலத்தை வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் கிராம மக்களிடம் கூறினர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் மருந்து நிறுவனம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விவசாய நிலம் உள்ளதால் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து சமாதானம் செய்ய முயன்றனர். இந்த வேளையில் கொந்தளித்த கிராம மக்கள் திரும்ப செல்லுங்கள் என்பதை உணர்த்தும் வகையில் ‘கோ பேக்’ என்று கோஷமிட்டனர்.
திடீரென்று கோபத்தின் உச்சிக்கு போன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தாக்குதலை தொடங்கினர். கலெக்டர் பிரதீக் ஜெயின் மற்றும் அதிகாரிகளை தாக்கினர். இதில் சில அதிகாரிகள் லேசான காயமடைந்தனர். இதையடுத்து பயந்துபோன அதிகாரிகள் வேகவேகமாக ஓடி தங்களின் கார்களில் ஏறி அமர்ந்தனர். ஆனாலும் கிராம மக்கள் அவர்களின் கார் மீது கல், கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.