கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபுறமும் உடனே அணுகுசாலை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் உள்ள இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படாததால், அதனைச்சுற்றியுள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில நேரங்களில் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றது. மேலும் இவ்வழியாக ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மழை காலங்களில் சுரங்க பாதையில் அதிக அளவில் மழைநீர் தேங்கிவிடுவதால் பள்ளி குழந்தைகளை ஏத்தி செல்லும் பள்ளி வாகனங்கள் சுரங்க பாதையில் மழை தண்ணீரில் சிக்கி கொள்ளும் நிகழ்வுகளும், விபத்துக்களும் அடிக்கடி நடைபெறுகிறது.
எனவே, இளையரசனேந்தல் சாலை ரெயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை (நபார்டு மற்றும் கிராமச்சாலைகள்) உதவிப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம்,மாதர் சங்க நகரச் செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
.இளைஞர் பெருமன்ற நகரத் தலைவர் ரஞ்சனி கண்ணம்மா,மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகாசெயலாளர் பாபு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர துணைச் செயலாளர் அலாவுதீன், தாலுகாக்குழு உறுப்பினர் ரெங்கநாதன்,ஏஐடியுசி தங்க நகை தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தங்கமாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்ட இறுதியில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.