நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல்
கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது.
இதையடுத்து, தனது கருத்துக்கு கஸ்தூரி மன்னிப்பு கோரினார். எனினும் மதுரை திருநகர், ஆண்டிப்பட்டி காவல் நிலையங்களில் கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல், அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது அளித்த புகாரின் அடிப்படையில், கலவரத்தை தூண்டுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எழும்பூர் போலீசார், கஸ்தூரி வீட்டிற்கு சென்ற போது அவருடைய வீடு பூட்டப்பட்டு அவருடைய போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக கருதி, தனிப்படையினர் தேடி வருகிறார்கள்.
இந்நிலையில், முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். உள்நோக்கத்தோடு தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கஸ்தூரி தனது முன் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.