2600 லிட்டர் தாய்ப்பால் தானம்: கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த அமெரிக்க பெண்
அமெரிக்காவை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் 2,600 லிட்டருக்கு மேல் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியம் என்பதும் சிறு வயதில் கொடுக்கப்படும் தாய்ப்பால் காரணமாக தான் அந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே, குறைந்தது 3 வருடங்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
ஆனால் ஒரு சில காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்கள், தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும் பெண்களுக்கு உதவிடும் வகையில் தாய்ப்பால் தானம் வழங்கப்பட்டு வருகிறது என்பதும், உலகம் முழுவதும் தாய்ப்பால் தானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 36 வயது பெண் அலிஸ் ஒகில்ட்ரி என்பவர் இதுவரை 2600-க்கும் அதிகமான லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்து சாதனை செய்துள்ளதாக வெளியாகி உள்ள செய்தியை அடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு 1,569 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி சாதனை படைத்த இவர், தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாய்ப்பால் மூலம் சுமார் 3.5 லட்சம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.