தோனிகாக சிஎஸ்கே கதவுகள் திறந்தே இருக்கும்: காசி விஸ்வநாதன்
சிஎஸ்கே அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, பதிரானா மற்றும் தோனி ஆகிய 5 வீரர்கள் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக சிஎஸ்கே அணியின் ரூ.65 கோடி பர்ஸ் தொகை செலவிடப்பட்டுள்ளது. இதனால் நடக்கவுள்ள மெகா ஏலத்தை ரூ.55 கோடியுடன் சிஎஸ்கே அணி சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில்., ஐபிஎல் தொடரில் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாட விரும்பினாலும், அத்தனை ஆண்டுகள் சிஎஸ்கே அணியின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காசி விஸ்வநாதன் கூறியதாவது:-
சிஎஸ்கே அணி எப்போதும் ஒரு கோர் அணியை தக்க வைக்க விரும்பும். அந்த வகையில் இம்முறை சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் ரீடெய்ன் தொடர்பாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தோனி இருவரிடமும் ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல் சிஎஸ்கே அணி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவிய வீரர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். ஏனென்றால் அவர்களால் தான் சிஎஸ்கே அணி சீரான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதனால் ரீடெய்னில் ருதுராஜ் மற்றும் ஜடேஜா இருவரையும் தக்க வைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடக்கவில்லை.
கட்டாயம் இருவரும் ரீடெய்ன் செய்யப்படுவார்கள் என்று அனைவருக்கும் நன்றாக தெரியும். அதேபோல் சிவம் துபே சிஎஸ்கே அணியால் வளர்க்கப்பட்டவர். இன்னும் சொல்ல போனால், தோனி தான் அவரின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தார். அதனால் அவர் சிஎஸ்கே அணியில் தொடர வேண்டும் என்று நினைத்தோம். கடைசியாக பதிரானா எந்த அணிக்கு சென்றாலும் மிக சிறந்த பங்களிப்பை அளிக்க கூடியவர்.
அதனால் அவரை ரீடெய்ன் செய்தோம். இந்த 4 வீரர்களுக்கும் பெரிய தொகை கொடுக்கும் போது, மெகா ஏலத்தில் போதுமான தொகை இருக்காது என்பதை நன்றாக அறிந்திருந்தோம். ஏனென்றால் மெகா ஏலத்தில் ஏராளமான தரமான இந்திய வீரர்கள் வருகிறார்கள். அவர்களில் சிறந்த வீரர்களை வாங்க பர்ஸ் தொகை இருக்காது என்று அறிந்தே செயல்பட்டோம்.
ஆனாலும் நிச்சயம் மெகா ஏலத்தில் சில தரமான வீரர்களை வாங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தோனியை பொறுத்தவரை எப்போதும் கடைசி நேரத்தில் தான் அவரின் முடிவை எடுப்பார்.
ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் தான் தனது கடைசி போட்டி இருக்கும் என்று கூறினார். ஆனால் சிஎஸ்கே அணி விரும்பும் வரை, தோனி விளையாட நினைக்கும் வரை, சென்னை அணியின் கதவுகள் திறந்தே இருக்கும். இவ்வாறு காசி விஸ்வநாதன் கூறினார்.