இராஜராஜசோழன் சதய விழா: காலியாக கிடந்த இருக்கைகள்
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரம் அன்று சதய விழா வெகு விமரிசையாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039-வது சதய விழா இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் அரசு விழாவாக நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடக்க உரையாற்றினார். இதையடுத்து வரலாறாக வாழும் மாமன்னன் இராஜராஜசோழன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில், நிகழ்ச்சிக்காக அரங்கத்தில் நூற்றுக்கணக்கான இருக்கைகள் போட்டு இருந்தன. ஆனால் இதில் கால் பகுதி இருக்கைகள் கூட நிரம்ப வில்லை. கோவிலுக்கு வந்த பக்தர்களும் ஏதோ நிகழ்ச்சி நடக்கிறது என்று எட்டி பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டனர். விழா அழைப்பிதழில் பெயர் போடப்பட்டு இருந்தவர்கள் வந்து இருந்தால் கூட இருக்கைகள் பாதியளவில் நிரம்பி இருக்கும்.
விழா குழுவினர் கோவிலுக்கு வரும் பக்தர்களும் சதய விழாவில் பங்கேற்பது போல் செய்ய வேண்டும். அவர்களுக்கு சதயவிழா பற்றி தெரிவித்து அமர செய்து இருக்க வேண்டும். விழா குழுவினர் இனியாவது கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சதய விழா காணவரும் பக்தர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.