கோவில்பட்டியில் பரபரப்பு: பிரேக் பிடிக்காததால் கோவில் சுவரில் மோதி பஸ்சை நிறுத்திய டிரைவர்
கோவில்பட்டி புதுரோடு இறக்கத்தில் மெயின்ரோடு சந்திப்பு பகுதி எப்போதும் பிசியாக இருக்கும். போக்குவரத்து போலீஸ் சிறிது நேரம் இல்லாவிட்டாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடும்.
அதே சமயம் போக்குவரத்து விதிமீறல் சம்பவங்களும் அடிக்கடி நடக்கும். பஸ் நிறுத்தத்தில் ஒழுங்காக பஸ்சை நிறுத்தாமல் மெயின்ரோட்டை மறித்து குறுக்காக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும்போது மற்ற வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி வந்த அரசு பஸ் புதுரோடு இறக்கம் வந்தது. அந்த பஸ்சில் பயணிகள் ஓரளவு இருந்தனர். பஸ் நிறுத்தத்தில் ஒருசிலர் இறங்கினர்.
அதை தொடர்ந்து பஸ் நிலையம் செல்வதற்காக மெயின்ரோட்டிற்கு பஸ்சை டிரைவர் திருப்பினார். அப்போது பிரேக் பிடிக்காததை உணர்ந்தார். திடீரென ஏற்பட்ட பிரேக் கோளாறால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சமயோசிதமாக சாலையின் மறுபுறம் இருக்கும் விநாயகர் கோவில் சுவரில் மோதி பஸ்சை நிறுத்தினார்.
இதில் பஸ்சின் முன்பக்கம் லேசான சேதம் அடைந்த்து. மற்றபடி கோவில் சுவருக்கு எந்தவித சேதமும் இல்லை. பயணிகள் பாதுகாப்பாக இறங்கிவிட்டனர்.,
டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கிறது, புதுரோடு இறக்கத்தில் பயணிகள் இறங்காவிட்டால் பஸ் வேகமாக வந்து திரும்பி இருக்கும். அந்த நேரம் பிரேக் கோளாறு ஏற்பட்டு இருந்தால் முன்னால் சென்றவர்கள் மீது மோதி இருக்கும்.
நல்ல வேளையாக பயணிகளை இறக்கிவிட்டு குறைந்த வேகத்தில் பஸ்சை டிரைவர் இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கிறது,
இந்த விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் கூட்டம் கூடி விட்டது. போக்குவரத்து போலீசார் அவைகளை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். அதை தொடர்ந்து கோவில் சுவரில் மோதி நின்ற பஸ் அங்கிருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.