உணவு பாதுகாப்புசட்டத்தில் முக்கிய திருத்தங்கள்: பதிவு சான்றிதழ் பெறாவிட்டால் அபராதம்- அதிகாரி எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் .ச.மாரியப்பன்,வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகமானது உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறுவதில் சில முக்கிய திருத்தங்களை அமுல்படுத்தியுள்ளது. அதன்படி, தெருவில் நடந்து சென்றோ அல்லது தள்ளு வண்டியில் உணவுப் பொருட்களைக் கொண்டு சென்றோ கூவி கூவி விற்பனை செய்யும் நடை வியாபாரிகளுக்கு, உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் கட்டணம் ரூ.100/-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே வேளை, அவர்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமல், பதிவு சான்றிதழ் பெற்று அதன் அசல் நகலை தங்கள் கையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், மொத்த வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், சில்லறை வியாபாரிகள், போக்குவரத்தாளர்கள், இருப்பு கிடங்குகள், இறக்குமதியாளர்கள், உணவுப் பொருளை விற்பனை மட்டும் செய்யும் இதர வியாபாரிகள், மற்றும் பெட்டி கடை வணிகர்கள் போன்றவர்கள் உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெறும் “தட்கல் வசதியையும்” இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை உணவு வணிகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இது குறித்தான மேலதிகத் தகவல்கள், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். மேலும், அதே இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்படுகின்றது.
மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகள் மற்றும் இதரத் துறைகளிடம் உரிமம் பெற்றிருந்தாலும், உணவுப் பொருட்கள் சார்ந்த வணிகத்திற்கு, உணவு பாதுகாப்பு உரிமம் மிகவும் அவசியமாகும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று, அதனை தங்கள் வணிக வளாகத்தில் காட்சிப்படுத்தி, உணவு வணிகம் மேற்கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமலோ அல்லது காலாவதியான உரிமத்துடனோ உணவு வணிகம் புரிவது என்பது தண்டனைக்குரியதாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டியது குறித்த பொது அறிவிப்பும், மாவட்ட அரசிதழில் அறிவிப்பும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதால், தவறிழைக்கும் வணிகர்கள் மீது எவ்வித முன்னறிவிப்பும் ஏதுமின்றி, நேரடியாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் இல்லாமல் உணவு வணிகம் புரிந்தால் ரூ.5000/- முதல் ரூ.10,00,000/- வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உணவு வணிகர்கள் இதில் கவனம் செலுத்தி, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
உணவு பாதுகாப்பு உரிமம்/ பதிவுச் சான்றிதழ் பெற, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இணைய சேவை மையங்களை மட்டுமே அணுக வேண்டும். அதன் விபரங்கள் https://mitra.fssai.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.
மேலும், சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உணவு வணிக வகைக்கு பி.ஐ.எஸ் (ஐ.எஸ்.ஐ) சான்றிதழ் கட்டாயம் என்பதை விலக்கிக்கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகம் சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
எனவே, குடிநீரை சுத்திகரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் உணவு வணிகர்களுக்கு, 17.10.2024 முதல் உணவு பாதுகாப்பு உரிமம் மட்டுமே கட்டாயமாகும். பி.ஐ.எஸ் சான்று அவசியம் இல்லை. கட்டணத் தொகைக்காக பி.ஐ.எஸ் உரிமம் பெற இயலாமல், உணவு வகையினை மாற்றி, மத்திய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருந்தால், தற்போது அவர்கள் உடனடியாக மாநில உணவு பாதுகாப்பு உரிமத்திற்கு சரியான உணவு வகையினை இணைத்து, மேற்கூறிய இணையதளம் மூலம் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது. மேலும், இதுகுறித்தான விபரங்களுக்கு https://fssai.gov.in என்ற இணையளத்தினை பார்வையிடலாம்.
மேற்கண்டவாறு டாக்டர் மாரியப்பன் கூறி உள்ளார்.