கோவை நூலகத்திற்கு பெரியார் பெயர் வைக்கப்படும்.: மு.க.ஸ்டாலின்
![கோவை நூலகத்திற்கு பெரியார் பெயர் வைக்கப்படும்.: மு.க.ஸ்டாலின்](https://tn96news.com/wp-content/uploads/2024/11/kovai.jpg)
கோவையில் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்திற்கு பெரியார் பெயர் வைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை அனுப்பர் பாளையத்தில்., பள்ளி கல்வி துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் சாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-
கோவையின் அடையாளமாக செம்மொழி பூங்கா மாறும். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை நேரில் ஆய்வுசெய்ய மாவட்டந்தோறும் ஆய்வு செய்கிறேன். மாவட்ட வாரியான ஆய்வை முதலில் நான் கோவையில்தான் மேற்கொண்டுள்ளேன்.
தடைகளை உடைத்து கோவைக்காக சிறப்பாக செயல்படுபவர் செந்தில் பாலாஜி. கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்ட செந்தில் பாலாஜிக்கு இடையில் சில தடைகளை ஏற்படுத்தினர். கோவையில் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்துக்கு பெரியார் பெயர் வைக்கப்படும். 2026 ஜனவரி மாதம் பெரியார் நூலகம் திறந்துவைக்கப்படும்.
சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் இருப்பதை போன்று கோவையில் பெரியார் நூலகம் அமையும். தங்கநகை தயாரிப்பாளர்களுக்கு ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் வளாகம் அமைத்துத்தரப்படும்.
தங்க நகை தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கேட்டப்பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறேன். தங்க நகை தொழில் வளாகம் அமைப்பதன் மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)