அமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியில் இருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ்
![அமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியில் இருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ்](https://tn96news.com/wp-content/uploads/2024/11/sunitha.jpg)
அமெரிக்க அதிபர் தேர்தலில் பூமியலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 விண்வெளி வீரர்கள் வாக்களித்துள்ளனர்.
அமேரிக்கா அதிபர் தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை தேர்தல் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிக எலக்ட்ரால் வாக்குகளை பெற்று குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்கத் தேர்தல் தினத்தன்று விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் டான் பெட்டிட் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, வாக்களித்து அதற்கான புகைப்படத்தைப் பகிர்ந்து ”அமெரிக்கராக இருப்பதில் பெருமிதம்” என நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம், எந்த இடத்திலிருந்தாலும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் என்பதை இவர்கள் விண்வெளியிலிருந்து வாக்கு செலுத்தியதன் மூலம் தெரிகிறது.
விண்வெளி வீரர்கள், விண்வெளியிலிருந்து வாக்களிக்க அமெரிக்க அரசு சிறப்பான வழிமுறைகளை கையாள்கிறது. அதன்படி, விண்வெளியில் இருந்தவாறு வாக்குப்பதிவு நாளன்று அவர்கள் தங்களது வாக்கு யாருக்கு என்பது குறித்து மெயில் அனுப்புவார்கள். அது நேராக விண்வெளி வீரர் குடியிருக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு செல்லும். அங்கு மற்ற வாக்குகளுடன் இவரது வாக்கும் சேர்க்கப்படும். இப்படி அனுப்பப்படும் மெயிலை அவ்வளவு எளிதாக ஹாக் செய்து விட முடியாது. இதற்காக பிரத்யேக வழிமுறையை நாசாவும், அந்நாட்டு தேர்தல் ஆணையமும் கையாள்கிறது.
விண்வெளி வீரர்களுக்கு விண்வெளியிலிருந்து வாக்களிக்கும் வசதி கடந்த 1997-ம் ஆண்டு முதல் இருந்தே அமெரிக்காவிலிருந்து வருகிறது. டேவிட் உல்ப் எனும் அமெரிக்க விண்வெளி வீரர்தான் விண்வெளியிலிருந்து முதன் முறையாக வாக்களித்தார். நேற்று சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உட்பட 4 விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து வாக்களித்துள்ளனர். டெக்சாஸ் சட்டமன்றம் இயற்றிய சட்டத்திற்கு பிறகு இந்த வசதி கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)