`பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்யகோரி ஆர்ப்பாட்டம்; கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு
![`பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்யகோரி ஆர்ப்பாட்டம்; கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு](https://tn96news.com/wp-content/uploads/2024/11/18647847-a99d-40ae-ad31-601564ca70f2-850x560.jpeg)
விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் எந்தவித வெளி தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களை =கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
8 வது சீசன் கடந்த அக்டோபர் 6 -ந்தேதி தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள் உள்ள அறையில் ஆண், பெண் கலைஞர்கள் சிலரை அடைத்து வைத்து, அவர்களது அந்தரங்க செயல்பாடுகளை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து ஒளிபரப்புவதும், இரட்டை அர்த்தம் தரக்கூடிய வசனங்களை பேசுவதும் மிகப் பெரிய அளவில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும். மேலும் இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பவர்களும் தவறு செய்யும் எண்ணத்தையும் உருவாக்கும்.
எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியினை, ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் தடை செய்திட வேண்டும். சினிமா துறைக்கு இருப்பது போன்று சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை முறை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன், செயலாளர்- வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, இந்திய கலாச்சார நட்புறவு கழக நிர்வாகிகள் அபிராமி பி/முருகன், வழக்கறிஞர்கள் ஜெய் ஸ்ரீ கிறிஸ்டோபர், முத்துக்குமார், நல்லையா, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மகாராஜன்,
மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், பகத்சிங் ரத்ததான கழக நிர்வாகிகள் மா. காளிதாஸ், குருஜி, லட்சுமணன், வேல்முருகன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகன், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரி ஷீலா, விடுதலை சிறுத்தைகள் கட்சி பாக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட இறுதியில் கோட்டாட்சியர் மகாலட்சுமியை கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன், செயலாளர்- வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின் உள்ளிட்டவர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)