ஆசிரியர்களுக்கு சம்பளம் தராததால் பாகிஸ்தானில் பல பள்ளிகள் மூடல்

 ஆசிரியர்களுக்கு சம்பளம் தராததால் பாகிஸ்தானில் பல பள்ளிகள் மூடல்

பாகிஸ்தானில் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் பள்ளிகளை மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இயங்கிவரும் சுமார் 2,200 பெண்கள் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இதே அவல நிலைதான், அங்குள்ள சுமார் 541 கல்வி மைய பள்ளிகளிலும், 275 தேசிய மனித மேம்பாட்டு ஆணைய பள்ளிகளிலும் உள்ளது. மேற்கண்ட பள்ளிகள் அனைத்தும் அரசின் தொடக்க மற்றும் உயர்நிலை கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.36,000 தொகை அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதோ ரூ.21,000 தான்.

இந்நிலையில், அறக்கட்டளைக்கு உரிய நிதியை அரசு விடுவிப்பதில்லை என அத்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க சுமார் ரூ.2 பில்லியன் தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியை ஒருவர் கூறுகையில், “சம்பளம் வழங்கப்படாததால் அத்தியாவசிய செலவுகளுக்காகக்கூட உறவினர்களிடம் கடன் வாங்கி செலவு செய்து வரும் பரிதாபகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக” வேதனையுடன் கூறினார்.

இதுமட்டுமல்லாது வாடகை கட்டடங்களில் செயல்பட்டுவரும் பெரும்பாலான பள்ளிகளுக்கு அறக்கட்டளை நிர்வாகத்திலிருந்து பணம் வழங்கப்படாததால், அக்கட்டடத்துகான வாடகை தொகையையும் ஆசிரியர்களே செலுத்தி வரும் அவலமும் நீடிக்கிறது. இப்போது ஆசிரியர்களுக்கோ சம்பளமும் வழங்கப்படுவதில்லை, இந்த நிலையில், தங்களால் எப்படி பள்ளி கட்டடங்களுக்கான வாடகையை செலுத்த முடியும் என ஆதங்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக, பல பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதாகவும், இதே நிலை தொடர்ந்தால், இன்னும் பல பள்ளிகள் மூடப்படும் அவலம் பாகிஸ்தானில் ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *