இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே 4 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களிலும், கேப்ட்ன் டாம் லாதம் 28 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த நெருக்கடியான சூழலில் பார்ட்னர்ஷிப் அமைத்த வில் யங் மற்றும் டேரில் மிச்செல் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இவர்களில் யங் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணி மீண்டும் விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கியது. ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் மாறி மாறி விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனிடையே டேரில் மிச்செல் 82 ரன்களில் அவுட்டானார்.
முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.