உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இந்திய வீரர் சிராக் சிக்காரா
உலக மல்யுத்த 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், இந்திய வீரர் சிராக் சிக்காரா தங்கம் வென்றார். 57 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீரர் சிராக் சிக்காரா என்ற பெருமையை பெற்றார்.
இந்திய மல்யுத்த குழு U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2024-ல் ஒரு தங்கம், வெள்ளி மற்றும் 7 வெண்கல பதக்கங்கள் உட்பட மொத்தம் ஒன்பது பதக்கங்களுடன் முடித்துள்ளது. U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் அக்டோபர் 21 முதல் 27 வரை அல்பேனியாவின் டிரானாவில் நடைபெற்றன.
இதில் இந்திய வீரர் சிராக் சிக்காரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். முதல் சுற்றில் ஜப்பானின் காடுகோ ஓசாவாவை 6-1 என்ற கணக்கில் தோற்கடித்த பிறகு, அவர் தனது காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் இந்தியா பதிரோவை 12-2 என்ற கணக்கில் வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினார்.
அரையிறுதியில், கஜகஸ்தானின் ஆலன் ஓரல்பெக்கிற்கு எதிராக சிராக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதி போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார். இறுதி போட்டியில் கிர்கிஸ்தான் வீரர் அப்திமாலிக் கராச்சோவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.
2022-ம் ஆண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற அமன் செஹ்ராவத் (ஆண்கள் 57 கிலோ) மற்றும் கடந்த ஆண்டு ரீத்திகா ஹூடா (பெண்கள் 76 கிலோ) ஆகியோருக்குப் பிறகு சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தைப் பிடித்த 3-வது இந்தியர் என்ற பெருமையை சிராக் சிக்காரா பெற்றார்.