விரைவில் வெளியாகும் கைதியின் இரண்டாம் பாகம்
மாநகரம் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் கைதி. இப்படத்தை எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோரால் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற பெயரில் இணைந்து தயாரிக்கப்பட்டது. சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்தார். இதில் நடிகர் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் மற்றும் தீனா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
கதாநாயகியை இல்லாமல் உருவான கைதி திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் பாகம் ஆகும். கைதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அக்டோபர் 25, 2019 அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்ற இப்படம் உலகளவில் ரூ.105 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றது.
இந்நிலையில், கைதி படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அதில், இது எல்லாம் இங்கிருந்து தொடங்கியது. டில்லி விரைவில் திரைக்கு வருவார். நடிகர் கார்த்தி மற்றும் எஸ்ஆர் பிரபுவுக்கு நன்றி. இவர்களால் தான் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் சாத்தியமானது.என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து கைதி-2 விரைவில் வெளியாகும்.என எதிர்பார்க்கப்படுகிறது.