சிறிய படங்களின் வெற்றி திரை துறையை மேலும் ஊக்குவிக்கும்: நடிகர் விமல்
நடிகர் விமல் நடித்த ‘சார்’ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்த நடிகர் விமல், இயக்குனர் போஸ் வெங்கட் உள்ளிட்ட பட குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
பின்னர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.இதனை தொடர்ந்து நடிகர் விமல் நிருபர்களிடம் கூறியதாவது:-
`சார்’ திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சிறிய திரைப்படங்கள் வெற்றி பெறுவது திரை துறையை மேலும் ஊக்குவிக்கும். ஓடிடி, திரையரங்கு என்பவை வெவ்வேறானவை. இரண்டும் திரைத்துறைக்கு மிகுந்த ஊக்கத்தை வழங்குகிறது.
திரையரங்குகள் மூலம் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவுகளை பெற்று கொண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது. விஜய் மாநாட்டிற்கு விஷால் செல்வேன் என கூறியது வரவேற்கத்தக்க விஷயம். எனக்கு அந்த நேரத்தில் படப்பிடிப்பு இருக்கும் காரணத்தால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குனர் போஸ் வெங்கட் கூறுகையில், `சிறிய திரைப்படங்கள் வெற்றி பெற நாட்கள் தேவைப்படுகிறது. ஆனால் முதல் 3 நாட்கள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு அடுத்த நாட்கள் திரையரங்குகளால் பொறுமை காக்க முடியாத நிலையில் நல்ல படங்களும் திரையரங்கை விட்டு வெளியேறுகிறது.
ஆனால் லப்பர் பந்து, சார் ஆகிய படங்களுக்கு பொதுமக்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சியை தருகிறது. வார இறுதி நாட்கள் தவிர்த்து அடுத்தடுத்த நாட்களிலும் ரசிகர்களின் ஆதரவை பெற்று படம் வெற்றி அடைந்திருக்கிறது. பொது மக்களின் நல்ல விமர்சனம் காரணமாக படம் வெற்றி அடைந்திருக்கிறது’ என்றார்.