ரோகித் சாதனையை முறியடித்த சிக்கந்தர் ராசா – பல சாதனைகளை குவித்த ஜிம்பாப்வே
நைரோபியில் நடைபெற்ற ஐசிசி டி20 ஆடவர் 2026 உலக கோப்பை சப் ரீஜனல் ஆப்பிரிக்கா பிரதேச தகுதி சுற்று போட்டியில் காம்பியா-ஜிம்பாப்வே அணிகள் மோதின.
இதில் காம்பியா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி பல சாதனைகளை முறியடித்தது. குறிப்பாக சிக்கந்தர் ராசா 33 பந்துகளில் சதம் அடித்து., டி20 போட்டியில் ரோகித் சர்மாவின் (35பந்துகள்) அதிவேக சத சாதனையை முறியடித்தார்.
டெஸ்ட் விளையாடும் நாட்டை சேர்ந்த ஒருவர் அடிக்கும் அதி வேக டி20 சதம் என்ற வரலாறு படைத்தார் சிக்கந்தர். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த உலக சாதனையாக ஜிம்பாப்வே 344 ரன்களை குவித்தது.
தொடர்ந்து ஆடிய காம்பியா அணி 54 ரன்களுக்கு சுருண்டது. 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே, டி20 கிரிக்கெட்டில் மகத்தான வெற்றியை ஈட்டி இன்னுமொரு உலக சாதனை படைத்துள்ளது. சிக்கந்தர் ரசா 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் 15 சிக்சர்களுடன் 133 ரன்கள் விளாசினார். மொத்தம் 27 சிக்சர்கள் என்று ஜிம்பாப்வே சாதனைகள் பலவற்றை முறியடித்துள்ளது.
அதே போல் நேபாளம் வைத்திருந்த அதிக டி20 ரன்களான 314 ரன்களை ஜிம்பாப்வே முறியடித்து இன்னொரு உலக சாதனை படைத்தது. அதே போல் 27 சிக்சர்கள் என்பது இதற்கு முந்தைய 26 சிக்சர்கள் சாதனையை கடந்து புதிய உலக சாதனையானது.
ஜிம்பாப்வே அணி சிக்சர்கள், பவுண்டரிகள் என 3.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டினர்.100 ரன்கள் பவர் பிளே முடிவதற்கு முன்பே வந்து விட்டது. இந்த இடத்திலிருந்து பந்துகள் மைதானத்தின் பார்வையாளர்கள் பகுதிக்கு பறந்த வண்ணம் இருந்தன. மொத்தம் 57 பவுண்டரிகள் இது இன்னுமொரு டி20 சாதனை ஆகும்.
நான்கு ஜிம்பாப்வே வீரர்கள் அரைசதம் கண்டதும் இன்னுமொரு டி20 சாதனை என்கின்றன புள்ளிவிவரங்கள். காம்பியாவுக்கு இன்னுமொரு மோசமான சாதனை என்னவெனில் அதன் பவுலர் மியூசா ஜொர்பாத்தே 4 ஓவர்களில் 93 ரன்களை வாரி வழங்கி புதிய டி20 வள்ளல் சாதனையை தன் வசம் கொண்டு வந்துள்ளார்.