கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுவின் 9-வது மாநாடு நடந்தது. கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்த மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் ஜவகர் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,மணி,ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
* 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி, அரசு அறிவித்த கூலியை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
* விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
* இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு 3 மாத காலத்துக்குள் இணைப்பு வழங்க வேண்டும்.
*கோவில்பட்டியில் இருந்து இளையரசனேந்தல் செல்லும் வழியில் ஓடையை மறித்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. எனவே, மழைநீர் செல்வதற்கு சாலையின் கீழ் வாய்க்கால் அமைக்க வேண்டும்.
* தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
*கட்டுமான தொழிலாளர் வாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.
*ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளுக்கும் உரிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
*அரசு அலுவலகங்களில் தேவைகளுக்கு வரும் பொதுமக்களை அலைய வைக்கக்கூடாது.
*திட்டங்குளம் கண்மாயை தூர்வார வேண்டும்
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் புதிய உறுப்பினர்கள் தேர்வு நடந்தது. ஒன்றிய செயலாளராக தெய்வேந்திரன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.