• November 1, 2024

செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கொத்தனார்

 செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கொத்தனார்

விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் மகாலிங்கம்(வயது 30). கொத்தனாராக வேலை செய்து வந்த  நிலையில் அவரது மனைவி முத்துமாரி மற்றும் குழந்தைகளுடன் தற்போது கீழவிளாத்திகுளத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் 130′ அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறினார்.

மேலும், “எனக்கும் தனது மனைவி முத்துமாரிக்கும் பிரச்சினையாக இருக்கிறது.. எனது மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள். இல்லையென்றால் கீழே குதித்து செத்துவிடுவேன்.. என்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக செல்போன் டவரிலேயே அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

.இதையடுத்து  மகாலிங்கத்தின் மனைவி முத்துமாரியை போலீசார் வரவழைத்து மகாலிங்கத்தை டவரில் இருந்து கீழே இறங்கி வரச் சொல்லுமாறு மைக் கொடுத்து பேச செய்தனர்.  பின்னர் மகாலிங்கத்தின் குழந்தையை வரவழைத்து குழந்தையும் பேசச் செய்தனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பல கட்ட முயற்சிகள் செய்தும், பலமுறை இறங்கி வரச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தியும், விடாப்பிடியாக மகாலிங்கம் இறங்கி வரமாட்டேன், எனக்கு நம்பிக்கை இல்லை என்று விரக்தியாக பேசிக்கொண்டே டவரின் மேலேயே அமர்ந்து கொண்டும், தொங்கிக் கொண்டும் விழுந்து விடுவேன் என்று கீழே இருந்த அதிகாரிகள் மற்றும் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார். 

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரமாக இறங்கி வர சொல்லியும் கேட்காததால் மகாலிங்கத்தின் மனைவி கோபித்துக் கொண்டு தனது மகனை அங்கிருந்து அழைத்து சென்றார். இதைக்கண்ட மகாலிங்கம், அங்கிருந்த பெண் உதவியாளரிடம், பாருங்க மேடம் எப்படி போறான்னு என்று சொல்லி எனக்கு அவளுக்கும் எந்த உறவுமில்லை என்று அவளிடம் எழுதி வாங்குங்கள், என்னுடைய குழந்தை எனக்கு மீட்டுத் தாருங்கள்… அப்படி செய்தால் தான் நான் இறங்கி வருவேன் என்று கூறினார். 

காவல்துறை அதிகாரிகளும் பொறுமையாக மகாலிங்கத்தின் பேச்சுக்கெல்லாம் சரி….சரி… என பதில் அளித்து அவரை இறங்க வைக்கும் முயற்சியிலேயே முனைப்புடன் செயல்பட்டனர்.  அதுமட்டுமின்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.  பின்னர், மகாலிங்கத்தின் உறவினர்கள் மற்றும் காவல்துறை, தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பலனாக செல்போன் டவரில் இருந்து மகாலிங்கம் கீழே  இறங்கி வந்தார்.

உடனடியாக மகாலிங்கத்திற்கு குடிக்க தண்ணீர் கொடுத்து காவல்துறையினர் அவரை பத்திரமாக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தற்காலை முயற்சி செய்த மகாலிங்கத்தின் மீது விளாத்திகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *