ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பக்தர்கள் பலி

 ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பக்தர்கள் பலி

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் குலசேகரன்பட்டினம் வந்து மாலை அணிந்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல், செக்காரக்குடி பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தசரா பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மாலை அணிந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து இன்று காலை சரக்கு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

உடன்குடி அனல்மின் நிலைய பகுதியில் வந்த போது முன்னால் சென்ற வாகனங்களை டிரைவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே ஆலங்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக பக்தர்கள் வந்த லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் ஆட்டோ டிரைவரான செக்காரக்குடியை சேர்ந்த சுடலைவீரன், பெருமாள் மகன் பெரும்படையான், ஆதிமூலப்பெருமாள் மகன் வடிவேல், சுப்பிரமணி, மாயாண்டி, மற்றொரு சுப்பிரமணி, சுடலைமணி, கிருஷ்ண பெருமாள், மற்றொரு சுடலைமணி, அய்யம்பெருமாள், அருணாச்சலம் ஆகிய 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் திருச்செந்தூர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பெரும்படையான், கிருஷ்ண பெருமாள், வடிவேல் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பெரும்படையான் (20), கிருஷ்ண பெருமாள் (25) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த ஆதிமூலப்பெருமாள் மகன் வடிவேல் (வயது17) சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆனது.

>இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டி வந்த டிரைவரான ஆலங்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்(வயது 38) என்பவரை பிடித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *