பொறியாளரிடம் வழிப்பறி: 2 பேர் கைது- 8 பேருக்கு வலைவீச்சு

கோவில்பட்டி ராஜீவ் நகர் 4-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). பொறியாளர். இவர், கடந்த 20-ந் தேதி பாரதிநகர் மேட்டு தெருவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு காரில் சென்றார். அங்கிருந்து இரவு 8 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலை அருகே வந்த போது 10 பேர் கும்பல் திடீரென்று காரை வழிமறித்தனர். அவரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டிய அவர்கள் , ராஜ்குக்மாரிடம் இருந்து செல்போன், பவர் பேங்க் ஆகியவற்றை பறித்தனர். பின்னர் காரையும் அடித்து சேதப்படுத்திவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது.
இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவில்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கரன் என்ற கரன்குமார் (26), புஷ்பராஜ் மகன் புவனேஷ் குமார் என்ற மோசஸ் (20) ஆகியோர் கூட்டாளிகளுடன் சேர்ந்து பொறியாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அந்த 2 வாலிபர்களையும் மேற்கு போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 8 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
