குழந்தைகளின் நோய்களைப் போக்கும் பிட்டாபுரத்தி அம்மன்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு வட மேற்கு முனையில் அமைந்துள்ளது. பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோயில். இந்த அம்மனை, வடக்கு வாய் செல்வி, செண்பகச் செல்வி என்றும் அழைக்கிறார்கள். தற்போது ‘புட்டாத்தி அம்மன்’ என்று இந்த அம்பிகை அழைக்கப்படுகிறாள். குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு.
இக்கோயில் அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும் சூலமும், இடக்கைகளில் பாசமும் கபாலமும் கொண்டு காட்சி தருகிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க, அம்பிகை அழகாகக் காட்சி தருகிறாள். அம்பாளின் அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும், சீவலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு வடிவங்களில் காட்சி அளிக்கிறார்கள்.
கோயிலுக்குள் நுழைந்ததும் பலி பீடமும் கொடி மரமும் காட்சி தருகிறது. அதைத் தொடர்ந்து வடக்கு முகமாக அனுக்ஞை விநாயகர், வடமேற்கு மூலையில் அகோர விநாயகர் காட்சி தருகிறார்கள். இதனை அடுத்து மகாமண்டபத்தில் நின்றுதான் அம்மனை வழிபட வேண்டும்.
கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில் , 5 அடி அகலத்தில் அழகிய பீடத்தில் வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு, வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் தாங்கியும் தரையில் கீழே விழுந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி காட்சி தருகிறாள்.
இக்கோயில் அம்மனுக்கு இரு நேர பூஜைகளிலும் பிட்டு நிவேதனம் மட்டுமே படைப்பது சிறப்பான ஒன்று. (பிட்டு படைப்பதால் அம்மனுக்கு இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது) இக்கோயிலில் பூஜை செய்து வரும் பல்லவராயர் வகுப்பை சேர்ந்தவர்கள், கோயிலிலேயே பிட்டை தயார் செய்து அம்மனுக்குப் படைப்பது சிறப்பு. அதேபோல், தீபாராதனை காட்டி முடிந்த பின் அம்மனுக்கு வேறு மாலைகளோ, பூக்களோ அணிவிக்க மாட்டார்கள்.
குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோயிலில் வேர் கட்டி மை தடவப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. இதனை நிரூபிக்கும் வகையில் நாள்தோறும் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளின் நோய்களைத் தீர்க்கும் விதமாக தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள்
இது மட்டுமின்றி, குழந்தைப் பேறு,பீடைகள், நோய்கள் தீர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் இங்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள். ஏராளமானோர் ராகு கால நேரத்தில் இந்த அம்மனை வணங்கி வழிபட்டு செல்கின்றனர். இந்த ஆலயத்தில் உள்ள அகோர விநாயகர் முன்புதான் நோய்வாய்ப்பட்டகுழந்தைகளுக்கு பூசாரி அனைத்து விதமான பரிகார பூஜைகளையும் செய்வார்.
இக்கோயிலில் வைகாசி, புரட்டாசி தசரா, தை அமாவாசை, பங்குனி திருமுழுக்கு போன்ற விசேஷங்கள் சிறப்பாக நடை பெறும். இந்தக் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு நோய்கள் நீங்கி அருள் பெறலாம்.