மாங்கல்யம்காக்கும் சோமவாரபூஜை
அந்த மன்னனின் பெயர் சித்திரவர்மன். அவனுடைய மகள் சீமந்தினி. மகளின் மீது தந்தை உயிரையே வைத்திருந்தான். ஒருநாள்… ஜோதிட வல்லுநர்களை அழைத்தான். தன் மகளுக்கு ஜாதகம் எழுதும்படி பணித்தான்.
அடடா… உங்கள் மகளின் ஜாதகம் அமோகமாக இருக்கிறது. அழகில் லக்ஷ்மிக்கு இணையானவள். கலை மற்றும் வித்தைகளில் கலைமகளைப் போல் திகழ்வாள். வீரத்திலும் தீரத்திலும் அன்னை உமையவளின் அடியொற்றி வாழ்வாள். உலகமே மெச்சும் ஆண்மகனை, கணவனாக அடைவாள்’ என்றார் ஜோதிடர் ஒருவர்.
இன்னொரு ஜோதிடர் இறுகிய முகத்துடன் தலை கவிழ்ந்து இருந்தார். அவரைப் பார்த்து மன்னன் பதற்றத்துடன் கேட்டான். அந்த ஜோதிடர், ‘மன்னிக்கவேண்டும் மன்னா. உங்கள் மகளுக்கு திருமணம் நடக்கும். ஆனால் வெகு சீக்கிரமே மாங்கல்யத்தை இழப்பாள் என்கிறது இவளின் ஜாதகம்’ என்று வருத்தத்துடன் சொன்னார்.
இதைக் கேட்டு அதிர்ந்தான் மன்னன். எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என ஒருகட்டத்தில் மனதைத் தேற்றிக் கொண்டான். அந்தப் பெண் வளர்ந்தாள். பெரியவளானாள். உரிய வயது வரவே, திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கினான் மன்னன். ஒருநாள் சீமந்தினியிடம், ஜோதிடர் சொன்னதை தோழிகள் தெரிவித்தனர்.
ஒருகணம் பதறிப் போனாள். பிறகு சுதாரித்து நிதானத்துக்கு வந்தவள், யாக்ஞவல்கிய முனிவப் பெருந்தகையின் மனைவியான மைத்ரேயியை சந்தித்து வணங்கினாள். தன் நிலையை விவரித்தாள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த விதியை மாற்றவே முடியாதா என்று அழுதாள். அவளைத் தேற்றி அணைத்தாள் மைத்ரேயி.
‘கவலையே வேண்டாம். முறையாக சோம வாரத்தை அனுஷ்டித்து வா. ஈசன் காத்தருள்வார். உனக்கு வரும் துன்பம் வராமலேயே போகும்’ என அறிவுரை கூறினாள்.
அதன்படி சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சிவனாரை நோக்கி கடும் விரதம் இருந்தாள் சீமந்தினி. மழையோ புயலோ… எது வந்தபோதும் விரதத்தைத் தொடர்ந்தாள். நளனின் பேரனும் இந்திரசேனனின் மைந்தனுமான சந்திராங்கதன் என்பவனுக்கும் இவளுக்கும் திருமணமும் நடந்தேறியது. ஜோதிடர் சொன்னது போலவே, உலகமே போற்றும் ஒப்பற்றவனாகத் திகழ்ந்தான் சந்திராங்கதன்.
வாழ்க்கை இனிதே கழிந்தது. குதூகலமாய் ஓடிக்கொண்டிருந்தது இல்லறம். நண்பர்கள் சுழ ஒருநாள், நதியில் நீராடிக் கொண்டிருந்த சந்திராங்கதன், அதில் மூழ்கிப் போனான். எல்லோரும் தேடினார்கள். அவன் கிடைக்கவே இல்லை.
எல்லோரும் துயரத்தில் மூழ்கித் தவிக்க, சீமந்தினி மட்டும் மனம் தளரவில்லை. சோம வார விரத நாளில், கண்ணீர் மல்க சிவனாரையும் பார்வதிதேவியையும் மனமுருக வேண்டினாள். வேண்டுதலுக்குப் பலன் கிடைத்தது. நீரில் அடித்துச் செல்லப்பட்ட சந்திராங்கதனை நாகர் இனத்தவர் காப்பாற்றினார்கள். சுயநினைவு வரும் வரை அவனை கண்ணின் இமை போல பார்த்துக் கொண்டார்கள் என விவரம் சொன்னான் சந்திராங்கதன்.
சோம வார விரதத்துக்கு இப்படியொரு மகிமை உண்டு என்கிறது புராணம். எனவே சோம வார நன்னாளில், சிவபார்வதியை விரதமிருந்து தரிசித்தால், மாங்கல்ய வரம் கிடைக்கும். மாங்கல்ய பலம் பெருகும். கணவனின் ஆயுள் நீடிக்கும். நல்ல கணவனை அமையப் பெறலாம். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். முன்னோர் ஆசியும் கிடைத்து சந்ததி சிறக்க வாழ்வார்கள்.
சோம வார நாளில், வில்வார்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்யுங்கள். சீரும் சிறப்புமாய் வாழ்வீர்.