தேர்தல் தோல்வி: தூத்துக்குடி தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. பாஜகவுடன் கூட்டணியை துண்டித்ததால் பாமக மற்றும் தமாகா கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறின.
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட கனிமொழி மீண்டும் வெற்றி பெற்றார். சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சிவசாமி தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் அதிமுகவின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதி வாரியாக கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் நேற்று தூத்துக்குடி தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள். தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் சிவசாமி , மாவட்ட செயலாளர்கள் கடம்பூர் ராஜு, சண்முகநாதன் மற்றும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.