`தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பதை இத்தோ்தல் முடிவு காட்டுகிறது’; கனிமொழி பேட்டி
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 5,40,729 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றிபெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிமுக வேட்பாளரை விட கனிமொழி 3,92,738 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு என்னில்க்கை முடிந்ததும் கனிமொழி,
தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
அமைச்சா்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சி. சண்முகையா, ஜீ.வி. மாா்க்கண்டேயன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் உடன் உடனிருந்தனா்.
பின்னர் தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் உள்ள பெரியாா், அம்பேத்கா், குரூஸ் பா்னாந்து, வ.உ. சிதம்பரனாா், காமராஜா், அண்ணா, இந்திரா காந்தி, கே.வி.கே.சாமி ஆகிய தலைவா்களின் சிலைகளுக்கு கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னர் அவர், செய்தியாளா்களிடம் கூறியதாவது-
தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் தோ்தலில் கணிசமான இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவுக்கு எதிரான மக்களின் மன நிலையை காட்டுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பதை இத்தோ்தல் வெற்றி மூலம் மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனா்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பெற்றுள்ள வெற்றியானது, மக்களுக்கு திமுக கூட்டணியின் மீது உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது .
இன்று(ஜூன் 5) மாலை நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நீடிப்பது அந்தக் கட்சிக்கு நல்லதல்ல. அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு தற்போது மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.