சுகாதார குறைபாடுகள்: பேக்கரியின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிக ரத்து; அதிகாரி அதிரடி
![சுகாதார குறைபாடுகள்: பேக்கரியின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிக ரத்து; அதிகாரி அதிரடி](https://tn96news.com/wp-content/uploads/2024/04/Screenshot_2024-02-14-16-44-34-50-850x560-1.jpg)
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன், தூத்துக்குடி மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட முத்தையாபுரத்தில் உள்ள ராஜன் என்பவருக்கு சொந்தமான மேனகா பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனத்தினை புகார் ஒன்றின் அடிப்படையில் ஆய்வு செய்தார்.
அப்போது, அந்த பேக்கரியின் தயாரிப்புக்கூடமானது மிகவும் சுகாதாரக்கேடுடனும், அதிக ஈக்கள் தொல்லையுடனும், உரிய கணக்குகள், பயிற்சி விபரங்கள் மற்றும் பகுப்பாய்வறிக்கைகள் ஏதுமில்லாமலும், அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததும், சமையல் எண்ணெய் பயன்பாடு குறித்தான விபரங்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது.
மேலும், காலாவதியான தேங்காய் துருவல் 3 கிலோ, அதிலிருந்து தயாரிக்கப்பட்ட கேக் மற்றும் பிஸ்கட் 3 கிலோ, தப்புக்குறியீடுடன் பொட்டலமிடப்பட்ட சுமார் 10 கிலோ ரஸ்க், ஓயின் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.
மிகுந்த சுகாதாரக் குறைபாடுடன் பேக்கரியின் தயாரிப்புக்கூடம் இருந்ததினால், பொதுமக்களின் பொதுசுகாதார நலனை கருத்தில்கொண்டு, அந்நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை இடைக்காலமாக தற்காலிக ரத்து செய்வதாகவும், அதனால் அந்நிறுவனத்தின் இயக்கத்தினை உடனடியாக நிறுத்திவைக்கவும் நியமன அலுவலர் டாக்டர் ச. மாரியப்பன் உத்திரவிட்டுள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)