கோவில் விழாவில் பானகம் அருந்திய 28 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு
![கோவில் விழாவில் பானகம் அருந்திய 28 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு](https://tn96news.com/wp-content/uploads/2024/04/739de7fd-2a62-46b1-a510-7756795ee78a-850x560.jpeg)
திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த அகரம் பகுதியில் ஒரு கோவிலில் விழாவில் பக்தர்களுக்கு கோவில் சார்பில் நீர் மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் சிலர் பானகம் தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கினர். இதனை கோவிலுக்கு வந்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாத்திரங்களிலும் வீடுகளுக்கு வாங்கிச் சென்று பிள்ளைகளுக்கு கொடுத்தனர்.
.பானகம் குடித்த சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். எனினும் மீண்டும் மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டது.
இது பற்றி அறிந்ததும் தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், நடமாடும் மருத்துவமனை டாக்டர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் கொண்ட குழுவினரை அனுப்பி அகரம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்தார்.
பாதிக்கப்பட்ட நபர்களை முகாமுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 5 மாணவ மாணவிகள், உட்பட 28 பேர் தொடர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, மருத்துவமனைக்கு நேரில் சென்றுநலம் விசாரித்தார். மருத்துவமனை டீன் டாக்டர் சுகந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர் வீரமணி, திண்டுக்கல் ஒன்றிய தி. மு. க. செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்,
மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வரதராஜன், திண்டுக்கல் மேற்கு தாசில்தார் வில்சன் தேவதாஸ், வருவாய் ஆய்வாளர் அறிவழகன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், அகரம் பேரூராட்சி செயல் அலுவலர் சூசை இன்ப ராஜேஷ், பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால் துணைத் தலைவர் ஜெயபால் ஆகியோர் இப் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர்.
வட்டார மருத்துவ சுகாதார ஆய்வாளர் தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பானகம் மற்றும் குடிநீர் போன்றவற்றை ஆய்வுக்காக மாதிரி எடுத்துச் சென்றனர்.முன்னாள் அகரம் பேரூராட்சி தலைவர் சக்திவேல், திண்டுக்கல் மாநகர திமுக பொருளாளர் மீடியா சரவணன், தாடிக்கொம்பு அதிமுக பேரூர் கழக செயலாளர் முத்தையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விடிய விடிய அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)