மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மு.க.அழகிரி மகனை முதல் அமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. 2014 ம் ஆண்டு திமுக தலைமை இடையே ஏற்பட்ட மோதலில் மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இவரது மகன் துரை தயாநிதி. சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது,
இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் வந்து அண்ணன் அழகிரிக்கு ஆறுதல் கூறினார்.
சென்னையில் 3 மாதமாக சிகிச்சை பெற்று வந்ததையடுத்து வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் மார்ச் 14 அன்று அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் துரை தயாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்ளிடமும் விசாரித்தார். ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா சென்று இருந்தார்.