மாரத்தான் போட்டியில் முதல் பரிசு வென்ற கணவன் -மனைவி
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூரில் மாபெரும் மாரத்தான் போட்டி. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று காலை நடத்தப்பட்டது.
ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்ற மாநில அளவிலான மாரத்தான் போட்டியை , திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.காலை 6:30 மணிக்கு கொடியசைத்து தொடக்கி வைத்தார். போட்டியானது அதே இடத்தில் 8:30 மணி அளவில் நிறைவு பெற்றது.
ஆண்களுக்கான போட்டி 21 கி.மீ தூரம் ஆகும். பெண்களுக்கான போட்டி 15 கி.மீ தூரம் ஆகும். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்குக் கனிமொழி எம்.பி ரொக்க பரிசு வழங்கி வாழ்த்தினர்.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற, புதுக்கோட்டையைச் சார்ந்த ஜி.லட்சுமணன் முதல் பரிசாக ரூ. 1 லட்சம், கோவையை சார்ந்த சதிஷ் குமார் இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், தென்காசியை பசுபதி மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரம், நீலகிரி சார்ந்த நிகில் குமார் நான்காம் பரிசாக ரூ. 25 ஆயிரம் மேலும் 5 முதல் 10 இடங்களில் வரும் 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற, புதுக்கோட்டையை சார்ந்த எள்.சூர்யா முதல் பரிசாக ரூ. 1 லட்சம், சேலம் மாவட்டத்தை சார்ந்த எல்.லதா இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், விருதுநகரை சார்ந்த கவுஷிகா மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரம், கோவையை சார்ந்த ஷானியா நான்காம் பரிசாக ரூ. 25 ஆயிரம் மேலும் 5 முதல் 10 இடங்களில் வரும் 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
இதில் சுவாரசியம் என்ன வென்றால், இரு பிரிவிலும் முதல் இடம் பெற்றவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த கணவன் – மனைவி என்பது குறிப்பிடத்தக்கத்தாகும்.
மேலும் பெண்களுக்கான போட்டியில், வெறும் காலில் ஓடியவர்களுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி தனது சொந்த செலவில் ஷூ வாங்கி கொடுத்தார்.