திருச்செந்தூரில் 21 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூரில் மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்ற மாநில அளவிலான மாரத்தான் போட்டி, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பிருந்து தொடங்கியது.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கொடியசைத்து போட்டியை தொடக்கி வைத்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்களுக்கான போட்டி 21 கி.மீ தூரம் ஆகும். வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ. 25 ஆயிரம், மேலும் 5 முதல் 10 இடங்களில் வரும் 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
பெண்களுக்கான போட்டி 15 கி.மீ தூரம் ஆகும். வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.25 ஆயிரம், மேலும் 5 முதல் 10 இடங்களில் வரும் 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது
சிறப்பு அழைப்பாளராக, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளரும் நகராட்சி துணைத் தலைவருமான செங்குழி ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.