காலி மது பாட்டில்களை ஏலம் விடுவதற்கான டெண்டரில் முறைகேடு; டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு
ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை ஒட்டி பல்வேறு சென்னையில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :-
தலைவர்களின் பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கொண்டாடி அதன்மூலம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஒரே கட்சி அதிமுக மட்டும் தான்.ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யும் இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான்.
பாரதிய ஜனதா கட்சி அவர்களது விளம்பர பலகைகளில் அதிமுக தலைவர்களின் படங்களை காண்பித்து மக்களை ஏமாற்ற நினைப்பது ஒரு கீழ்த்தரமான அரசியல்.
புரட்சி தலைவர், புரட்சி தலைவியின் பெயரை கூறி பிரச்சாரம் செய்யும் பாஜகவினருக்கு வெட்கம் இல்லையா.
காலி மது பாட்டில்களை ஏலம் விடுவதற்கான டெண்டரில் மாபெரும் முறைகேடுகளும் குளறுபடிகளும் நடைபெருகிறது.
தமிழக அரசின் சார்பில் நடைபெறும் டாஸ்மார்க் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களை மீண்டும் சேமிக்கும் வகையிலான திட்டத்தின் கீழ் டெண்டர் விடுப்படுகிறது.ஆனால் தமிழகம் முழுவதும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகளுக்கு மட்டுமே அந்த டெண்டரை அளிக்கும் வகையில் தி.மு.க அரசு திட்டம் தீட்டி அதற்கான பணிகளை செய்து வருகிறது.
.மது பிரியர்கள் சாப்பிட்டு கீழேபோடும் எச்சில் பாட்டிலில் கூட திமுக அரசு 50 கோடி ரூபாய் சுருட்ட நினைக்கிறது.
ஆயிரம் கருணாநிதி, ஆயிரம் ஸ்டாலின், ஆயிரம் பிஜேபி வந்தாலும் அதிமுகவை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
அதிமுகவின் தனித்தன்மை அடையாளத்தை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை மக்களின் ஆதரவோடு சந்திப்போம்.
கூட்டணிக்கு வரும் கட்சிகளை வந்தால் வரவேற்போம்.
ஜனநாயகத்தை கொன்று விட்டு பணநாயகத்தை வைத்து வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று விடலாம் என்ற மமதையில் மப்பில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி வழக்காடு மொழியாக உள்ளபோது தமிழகத்தில் மட்டும் தமிழை வழக்காடு மொழியாக்க தமிழுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக கூறும் திமுக அரசு சட்ட மசோதா கொண்டு வராதது ஏன்?
மத்திய அரசுடன் 17 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக எம்பிக்கள் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான குரல் எழுப்பாதது ஏன்?
தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசு மண்ணை கவ்வும் வகையில் மக்கள் அதிமுக வுக்கு வாக்களிப்பார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.