• May 20, 2024

தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி மாற்றப்படும் ஆட்சியர்கள்; புதிய ஆட்சியராக கமல் கிஷோர் பதவி ஏற்பு

 தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி மாற்றப்படும் ஆட்சியர்கள்; புதிய ஆட்சியராக கமல் கிஷோர் பதவி ஏற்பு

திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக உதயாமான தென்காசி மாவட்டத்தில் ஆட்சியர்கள் மாற்றம் என்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஒரு ஆட்சியர் முழுமையாக ஒரு வருடம் கூட பணியாற்றாமல் மாற்றப்படுவதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.

தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் 22.11.2019 முதல் 15.1.2020 வரையிலும், சமீரன் 15.12020 முதல் 15.6.2021 வரையிலும், கோபால சுந்தரராஜ் 17.6.2021 முதல் 14.6.2022 வரையிலும், ஆகாஷ் 16.6.2022 முதல் 6.2.2023 வரையிலும், துரை. ரவிச்சந்திரன் 6.2.2023 முதல் 28.1.2024 வரையிலும் பணியாற்றி இருக்கிறார்கள்.

தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த துரை. ரவிச்சந்திரன் உயர் கல்வித் துறை துணைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக பணியாற்றிய கமல் கிஷோர், தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக நேற்று மாலை பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் பி.டெக். (பொது நிர்வாகம்) படித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். உதவி ஆட்சியராக திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும், கூடுதல் ஆட்சியராக திருவாரூர் மாவட்டத்திலும் பணியாற்றினார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் இணை தலைமை செயல் அலுவலராகவும், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன நிர்வாக இயக்குனராகவும் இருந்துள்ளார். இறுதியாக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.

புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் கமல் கிஷோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

.இந்த மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் விவசாயத்தைச் சார்ந்த மாவட்டமாக உள்ளது.எனவே விவசாயத்தை மேம்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இதுதவிர மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உரிய அனைத்து திட்டங்களும் நிறைவேற என்னால் முடிந்த வரை முயற்சி செய்து மாவட்டத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை என்னிடம் மனுவாக கொடுக்கலாம். தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

அந்த திட்டங்கள் நிறைவேற தடையாக எதுவும் இருந்தால் அதனை சரிசெய்வதற்கு முயற்சி செய்வேன். தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை ஓரளவுக்கு நான் தெரிந்து வைத்துள்ளேன். இன்னும் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *