பொதுமக்கள் படையெடுப்பு: அஞ்சலிக்காக 8¾ மணி நேரம் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். சினிமாவில் பல்வேறு சாதனைகள் புரிந்து மக்கள் மனம் கவர்ந்தவர். அவருக்கு சினிமா ரசிகர்கள் அதிகம் உண்டு. தென் இந்திய நடிகர் சங்க தலைவராக இருந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர்.
சினிமாவில் நடித்து கொண்டு இருந்தபோதே அரசியலில் நுழைந்தார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். அரசியலில் அவரது வெற்றி நீடிக்கவில்லை. உடல்நலகுறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்தார்.
நாளடைவில் அவரது உடல்நிலை மேலும் பாதிப்பு அடைந்தது. இந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார். விஜயகாந்த் உடல் பொதுமக்கள் பார்வைக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கபட்டு இருந்தது. பின்னர் இன்று காலை தீவுத்திடல் மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டது.
தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என சென்னைக்கு படையெடுத்தனர். சாரை சாரையாக தீவுதிடல் நோக்கி பொதுமக்கள் வந்தனர். நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். கூட்டம் அதிகரிப்பினால் தீவுத்திடல் குலுங்கியது.
அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சினிமா தொழில் நுட்ப கலைஞர்கள் குவிந்தனர். விஜயகாந்த் உடலை பார்த்து துணை நடிகர்கள், சண்டை கலைஞர்கள் கதறி அழுதனர்.
விஜயகாந்த் ரசிகர்கள் பலர் விஜயகாந்த் உருவப்படம் பொறிக்கபட்ட பேனர்களை ஏந்தி வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தேமுதிக கட்சி கோடி ஏந்தியும் பலர் வந்தனர். வெளியூர்களில் இருந்து சிறுவர், சிறுமிகளை அழைத்து வந்த பெற்றோர்கள் கூட்டத்தில் தோளில் சுமந்து சென்றனர். சிறுவர், சிறுமிகள் விஜயகாந்த் உடல் இருந்த பேழையை பார்த்து சோகத்துடன் கைகளை அசைத்தனர். காலை 6 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு விஜயகாந்த் உடல் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கூட்டம் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தால் பார்வை நேரம் நீடித்தது. பிற்பகல் 2.45 மணி வரை தொடர்ந்து 8¾ மணி நேரம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின.