• May 20, 2024

நாளை கார்த்திகை தீபதிருவிழா; திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?

 நாளை கார்த்திகை தீபதிருவிழா; திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய தலமாக போற்றப்படுகிறது இந்த தலம்.

இங்கு சிவபெருமானே மலையாக வீற்றிருந்து காட்சி தருவதாக ஐதீகம். எனவேதான், பக்தர்கள் இந்த மலையை வலம் வந்து (கிரிவலம்) சிவபெருமானை வணங்குகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது மகத்துவம் வாய்ந்தது.

பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருவண்ணாமலையில் பக்தர்கள் மட்டுமல்ல அண்ணாமலையாரும் வருடத்திற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார். அதாவது, கார்த்திகை தீபத் திருநாளுக்கு மறுதினமும், தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்றும், அண்ணாமலையார் திருவீதி உலாவாக கிரிவலம் வருகிறார்.

திருமஞ்சன கோபுர வீதியின் கடைசியில் உள்ள குமரகோவிலில் இந்த இரண்டு நாட்களும் இரவு தங்குகிறார். அதிகாலையில் அபிஷேகம் முடிந்ததும் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுகிறார். 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும். அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோவில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும்போது தீபாராதனைகள் நடைபெறும்.

கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் துஷ்ட தேவதைகள் அண்டாமல் இருப்பதற்காகவும், துஷ்ட தேவதைகளை விரட்டுவதற்காகவும் அண்ணாமலையார் இவ்வாறு ஆண்டிற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.  

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

நாளை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி கார்த்திகை மாத பவுர்ணமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.58 மணிக்கு தொடங்கி மறுநாள் திங்கள் கிழமை மாலை 3.08 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

மேலும் தீபத் திருவிழாவில் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *