100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் வாக்காளர் பட்டியல்; டி.ஜெயக்குமார் கோரிக்கை
மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த பொது கூறியதாவது:-,
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று எங்களது கருத்துகளை தெரிவித்தோம். கடந்த காலத்தில் 18 வயது நிரம்பியோர் வாக்காளர்களாக விண்ணப்பிக்க ஒருமுறைதான் வாய்ப்பு வழங்கப்பட்டது , தற்போது மூன்று முறை வழங்கப்படுகிறது.
வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் , நீக்கல் தொடர்பான படிவங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் வழங்குமாறு கூறினோம். 18 வயது நிரம்பியோரில் கடந்த ஆண்டில் 30 சதவீதம் மட்டுமே சேர்த்துள்ளனர் , அவர்களை முழுமையாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.
நவம்பர் மாதத்தில் பெயர் சேர்ப்பு முகாம் நடக்கும்போது அரசியல் கட்சிகளை மட்டுமே சார்ந்திருக்காமல் தேர்தல் ஆணையமும் வாக்காளர்களின் பெயர்களை முழுமையாக சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கோள்ள வேண்டும்.
குடிசை மாற்று வாரியங்களில் இருப்போருக்கு வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் முறையாக வழங்குமாறு வலியுறுத்தினோம். தேர்தல் ஆணைய வலைதளத்தில் வாக்காளர்களின் புகைப்படங்களை இணைக்க கோரினோம்.
ஆதார் கார்டுகளை வாக்காளர் அட்டையுடன் இணைத்ததன் மூலம் 20 லட்சம் பேர் பெயர் நீக்கம் செய்யப்பட்டது மகிழ்ச்சி , ஆனாலும் இறந்த பலரின் பெயர் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது. முகவரி மாறிய பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.
நவம்பர் மாதம் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான முகாம் நடக்கும்போது அரசியல் கட்சிகள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ஆணையம் சார்பில் கூறியுள்ளனர். 100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.