சிதலமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்து கான்கிரீட் வீடுகள்; கனிமொழி எம்.பி. ஏற்பாடு
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மானங்காத்தான் கிராமத்தை தத்தெடுத்துள்ளார். 2022 ஏப்ரல் மாதம் பஞ்சாயத்துராஜ் திட்டத்தையொட்டி தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி. அந்தக் கிராமத்தை தத்தெடுத்து, முன்மாதிரி கிராமமாக மாற்றும் நோக்கில் தத்தெடுப்பதாக அறிவித்தார்.
இங்கு 1996 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட காலனி வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்தது. சிதிலமடைந்திருந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கனிமொழி கருணாநிதி எம்.பியின் முயற்சியால், என்.டி.டி. குளோபல் டேட்டா மையங்கள் & கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட்,சென்னை என்ற தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து, புது வீடுகள் கட்டும் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார். அதன்படி கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவுபெற்ற 9 வீடுகளைக் கனிமொழி எம்.பி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.