கோவில்பட்டியில் குழந்தைகளை அரிசியில் `அ’ எழுத வைக்கும் சடங்கு  

 கோவில்பட்டியில் குழந்தைகளை அரிசியில் `அ’ எழுத வைக்கும் சடங்கு  

நாடு முழுவதும் விஜயதசமி இன்று  கொண்டாடப்பட்டது. விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளின் சுட்டு விரலைப்பிடித்து, தட்டில் பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பார்கள்.

இதே போல் கோவில்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். கடவுள் சன்னதியில் தாயின் மடியில் குழந்தையை அமர வைத்து முன்புறம் வாழை இலை விரித்து அரிசி பரப்பி  `அ’ என்று எழுத வைப்பார்கள்.

இந்நிகழ்ச்சியை ‘வித்யாரம்பம்’ என்று அழைக்கிறார்கள். பெற்றோர் தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினத்தன்று பள்ளியில் சேர்க்க விரும்புவார்கள். அந்த வகையில், விஜயதசமி நாளான இன்று  தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

தனியார் பள்ளிகளில் பிரிகேஜி, எல்கேஜி மற்றும் முதல் வகுப்புகளில் ஏராளமான குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். அரசு பள்ளிகளில், மாணவர்சேர்க்கையை உயர்த்தும் வகையில், விஜயதசமி நாளில், புதிய மாணவர்களை சேர்க்கைக்கு அனைத்து தொடக்கப்பள்ளிகளையும் இன்று  திறந்துவைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, விஜயதசமியை முன்னிட்டு தனியார் பள்ளிகளைப் போன்று அரசு பள்ளிகளும் இன்று  திறந்து வைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

கோவில்பட்டியிலும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. எல்.கே.ஜி.க்கு முன்பாக பிரிகேஜி வகுப்பில் சேர்க்க 2-3 வயது குழந்தைகளின் பெற்றோர் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

கோவில்பட்டி ராஜீவ் நகர் 5-வது தெருவில் `லிட்டில் மில்லினியம்’ நர்சரி பள்ளிக்கூடம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. அப்பள்ளியில் புதிதாக சேரும் குழந்தைகளுக்கு விஜயதசமியை முன்னிட்டு அரிசியில் `அ’ எழுதும் வித்யாம்பம் என்ற இந்த சமய சடங்கு செய்வதற்கு லிட்டில் மில்லினியம்’ நர்சரி பள்ளி சார்பில் தலைமை கற்றல் அதிகாரி ஆர்.சித்ரா ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த சடங்கு ராஜீவ்நகர் 4-வது தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த சடங்கில் பங்கேற்றனர்.

அவர்களுக்கு முதலில் அரிசியில் விரலால் பிள்ளையார் சுழி போட  வைத்து பின்னர் `அ’ மற்றும் `ஹரி ஓம்’  என்று எழுத வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அனைவருக்கும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் நர்சரி பள்ளியில் குழந்தைகளின் பெற்றோர்கள் பார்வையிட்டனர். அங்கிருந்த கற்றல் மற்றும் விளையாட்டு வசதிகளை பார்த்து வியந்தனர். மேலும் இன்று நல்ல நாள் என்பதால் பள்ளி கட்டணத்தை செலுத்தினார்கள்.

நாளை புதன்கிழமை  முதல் பள்ளி  பள்ளி தொடங்கும் என்றும் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை பள்ளி நடைபெறும் என்று தலைமை கற்றல் அதிகாரி ஆர்.சித்ரா தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *